திண்டிவனம் இருளர் குடியிருப்பில் சப்-கலெக்டர் ஆய்வு

திண்டிவனத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2020-01-19 22:30 GMT
திண்டிவனம்,

திண்டிவனம் ஜக்காம் பேட்டை முனியாண்டி நகரில் இருளர் குடியிருப்பை சேர்ந்த விஜியின் மனைவி பத்மா உள்பட 10 குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் திண்டிவனம் சப்-கலெக்டர் அனுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், ஆதார் கார்டு ஆகியன வழங்கிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

மேலும் தற்போது நாங்கள் வசித்து வரும் பகுதிக்கு அங்குள்ள விவசாய நிலத்தின் வழியாக செல்லும் ஒத்தையடி பாதை வழியாக தான் சென்று வருகிறோம். சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் என்று எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமலே வாழ்ந்து வருகிறோம். எங்களது பகுதியில் இருந்து 14 குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் இரவில் தங்களது வீட்டில் வைத்து படிக்க கூட மின்சார வசதி இல்லாத நிலை இருக்கிறது. எங்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரக்கோரி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதில் தெரிவித்து இருந்தனர்.

சப்-கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் சப்-கலெக்டர் அனு சம்பந்தப்பட்ட இருளர் குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அப்போது அந்த மக்கள் பயன்படுத்தி வரும் ஒத்தையடி பாதை வழியாக நடந்து சென்று, அவர்களது குடியிருப்புகளை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், அவர்கள் அனைவருக்கும் சாதி சான்றிதழ்கள் வழங்க திண்டிவனம் தாசில்தார் ராஜசேகருக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே அரசு விதிகளின் படி மனைப்பட்டா வழங்கவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரவும் நடவடிக்கை எடுப்பதாக சப்-கலெக்டர் அனு உறுதியளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஆய்வின் போது, வருவாய் ஆய்வாளர் சித்தார்த், கிராம நிர்வாக அலுவலர் சதாம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்