ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கட்டணத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வசதி

ஆலந்தூர், நந்தனம், கிண்டி மற்றும் சின்னமலை ஆகிய 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வாடகைக்கு விடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2020-01-19 23:12 GMT
சென்னை, 

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், விரைவாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணம் செய்வதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, ஆலந்தூர், விமான நிலையம், சென்டிரல், வண்ணாரப்பேட்டை, அண்ணாசாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் 45 கிலோ மீட்டருக்கு மேல்மட்டப்பாதை மற்றும் சுரங்கப்பாதைகளில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து வருகிறது. வாடகை சைக்கிள், வாடகை கார், வாடகை ஆட்டோ வசதிகள், மினிபஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மெட்ரோ பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக கடந்த ஆண்டு வாடகை ‘ஸ்கூட்டர்’ சேவையை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. நிமிடத்துக்கு ரூ.1.20 கட்டணத்தில் வாடகை ஸ்கூட்டர் சவாரியை மெட்ரோ ரெயில் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம். மொபைல் போனில் ‘ஸ்கூட்டர்’ ரெண்டல் ஆப் டவுன்லோடு மூலம் ஆரம்ப இடம், முடிவு இடம் பதிவிட்டு ஓ.டி.பி. எண் மூலம் இந்த வசதியை பெறலாம்.

வாடகை ‘ஸ்கூட்டர்’ வசதியை உபயோகித்தப் பின்னர் ஸ்கூட்டரை ஒப்படைக்கும் போது கணக்கிட்டு பணம் செலுத்தலாம். ‘கியூ.ஆர்’ கோடு மூலமும் இந்த வசதியை பெற முடியும். மெட்ரோ ரெயில் நிலைய வாடகை ஸ்கூட்டர் வசதி மூலம் பயணிகள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவோர்கள், வேலைக்கு செல்வோர்கள், வீடு, அலுவலகங்கள் செல்வோர் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர்.

சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர் திட்டத்தை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் ஆலந்தூர், நந்தனம், கிண்டி, சின்னமலை ஆகிய 4 ரெயில் நிலையங்களில் இந்த சேவையை முதல் கட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை தினசரி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அளிக்கப்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆதார் அட்டையை காண்பித்து பதிவு செய்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். பயணிகளின் வரவேற்பை பொருத்து அடுத்த ஆண்டுக்குள் கூடுதலான ரெயில் நிலையங்களில் வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி 6 ஆயிரம் ஸ்கூட்டர் வரை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்