திருமானூர் அருகே விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உண்ணாவிரதம்

திருமானூர் அருகே விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-20 23:00 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்திவேல்(வயது 40), இளங்கோவன்(45). இவர்கள் இருவரும் கடந்த 1-ந் தேதி அதிகாலை 5 மணியளவில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறுக்கு மிளகாய் விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர்.

அப்போது திருமானூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இளங்கோவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அன்று அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டம்

இந்த நிலையில் விபத்து நடந்து 20 நாட்கள் ஆகியும் குற்றவாளி யார் என்பதை இன்னும் போலீசார் கண்டு பிடிக்காததால் நேற்று சக்திவேலின் குடும்பத்தினர் போலீசாரின் மெத்தனப்போக்கை கண்டித்தும், உடனடியாக குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்யக்கோரியும் மேலும் நிவாரண நிதி வழங்கிட கோரியும் குந்தபுரம் கிராமத்தின் நடுவே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சக்திவேலின் மனைவி சங்கீதா(37) மற்றும் அவரது மகன் லோகேந்திரன்(14), மகள் அபி(12) மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், போலீசாரிடம் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து விட்டீர்களா? என்று கேட்டால் தேடிக்கொண்டே இருக்கிறோம் என்று கூறுகின்றனர். மேலும் இன்று பார்க்கலாம், நாளை பார்க்கலாம் என்று மட்டுமே கூறி வருகின்றனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று கூறினர்.

பேச்சுவார்த்தை

இதனையடுத்து 4 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.

கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்