சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-20 22:30 GMT
கோவை,

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கிய பேரணி அண்ணாசிலை சிக்னல் வழியாக சென்று வ.உ.சி. மைதானத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனர். இதில் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், துணை கமிஷனர் உமா, போக்குவரத்து மண்டல இணை ஆணையர் உமாசக்தி, வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் பாஸ்கரன், குமரவேல், சரவணன் மற்றும் போலீசார், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சாலை விதிகள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கத் திலும் ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படு கிறது. இதையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பாக இன்று (நேற்று) முதல் வருகிற 27-ந்தேதி வரை (26-ந்தேதி நீங்கலாக) சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது.

சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு காரணமாக கோவை மாவட்டத்தில் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டு 560-ஆக இருந்த விபத்து உயிரிழப்பு, 2019-ம் ஆண்டு 452-ஆக குறைந்து உள்ளது. அனைவரும் சாலைபாதுகாப்பு விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம் பஸ்நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம், சிடிசி சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்