சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பயங்கரவாதிகள் கோர்ட்டில் ஆஜர்

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Update: 2020-01-20 23:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர். கடந்த 14-ந் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் போலீசாரிடம் இருவரும் பிடிபட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை, பெங்களூருவில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்ததால் பழிவாங்கும் நோக்கத்தோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொல்லப்பட்டது தெரியவந்தது. அப்துல் சமீம், தவுபிக் இருவரும் கைது செய்யப்பட்டு குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 2 பேரையும் 20-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. 2 பயங்கரவாதிகளும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோர்ட்டில் ஆஜர்

அப்துல் சமீம், தவுபிக் இருவருக்கும் நேற்றுடன் காவல் முடிவடைந்தது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர். இதை யொட்டி நாகர்கோவில் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று பகல் 2 பயங்கரவாதிகளையும் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவில் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து வந்து மாவட்ட முதன்மை கோர்ட்டில் நீதிபதி அருள்முருகன் முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது போலீஸ் தரப்பில் துணை சூப்பிரண்டு கணேசன், 2 பயங்கரவாதிகளையும் 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்தார். உடனே அப்துல் சமீம், தவுபிக் இருவரிடமும், நீங்கள் போலீஸ் காவலில் செல்கிறீர்களா? என்று நீதிபதி அருள் முருகன் கேட்டார். அதற்கு அவர்கள், போலீசார் எங்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டார்கள். எனவே போலீஸ் காவலில் செல்ல நாங்கள் விரும்பவில்லை என்றனர்.

இன்று முடிவு

இந்த மனு தொடர்பாக அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகர் ஆஜராகி போலீசாருக்கு ஆதரவாக வாதாடினார். அதேநேரத்தில் பயங்கரவாதிகள் தரப்பில் மதுரையை சேர்ந்த வக்கீல் ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட வக்கீல்கள் குழு ஆஜரானது. அப்போது 28 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த போலீசாரின் மனுவுக்கு எதிர்த்தரப்பு வக்கீல் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள்முருகன், இதற்கான முடிவை இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்தார். அதுவரையிலும் 2 பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து 2 பயங்கரவாதிகளும் மீண்டும் கோர்ட்டில் இருந்து பாளையங்கோட்டை சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். 

மேலும் செய்திகள்