கொடைக்கானல் அருகே பயங்கரம்: 200 அடி பள்ளத்தில் விழுந்து மாணவி பலி - அருவியை ரசித்த போது பரிதாபம்

கொடைக்கானல் அருகே அருவியை பார்த்து ரசித்தபோது சுமார் 200 அடி பள்ளத்தில் தவறிவிழுந்து மாணவி பலியானார்.

Update: 2020-01-20 23:15 GMT
கொடைக்கானல்,

அரக்கோணத்தில் உள்ள அருணா ஓட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் படித்து வந்த 20 மாணவிகள் அங்கிருந்து பயிற்சிக்காக கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் கடந்த ஒரு மாதமாக தங்கி பயிற்சி எடுத்து வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர்களுக்கு பயிற்சி முடிய இருந்தது.

இந்தநிலையில் அரக்கோணத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீதேவியும் (வயது 34), அவருடன் படிக்கும் பாரதியும்(19), நட்சத்திர ஓட்டலில் வேலை பார்க்கும் கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த முனியாண்டி (24) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பேத்துப்பாறை கிராமம் அஞ்சு வீடு அருவி பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.

அப்போது முனியாண்டி அருகில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். மாணவிகள் இருவரும் அருவியை பார்த்து ரசித்தனர். இந்தசமயத்தில் ஸ்ரீதேவி திடீரென அங்கிருந்த சுமார் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்து அருவி தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து பாரதி கூச்சல் போட்டார். அதையொட்டி பேத்துப்பாறையை சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த 50-க் கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளத்தில் இறங்கி சுமார் அரைமணி நேர தேடுதலுக்குப்பின், ஸ்ரீதேவியின் உடலை அருவி தண்ணீரில் இருந்து பிணமாக மீட்டனர். பின்னர் அங்கிருந்து டோலி கட்டி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சுமந்து ஸ்ரீதேவியின் உடலை மேலே தூக்கி வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஸ்ரீதேவி அரக்கோணம் பழனி பேட்டை, லட்சுமணன் நகர் கண்டிகை 2-வது தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி என்பது தெரியவந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அருவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தவறி விழுந்த 2 பேர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே சுற்றுலா பயணிகள் அஞ்சு வீடு அருவியை பாதுகாப்பான முறையில் பார்ப்பதற்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அருவியில் தண்ணீர் விழும் இடத்தை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்