சேலத்தில் டாக்டர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சேலத்தில் டாக்டர் வீட்டில் 17 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-01-20 23:00 GMT
சேலம்,

சேலம் அழகாபுரம் காட்டுகுமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோ‌‌ஷ்குமார் (வயது 30). இவர் சேலம் அரியானூரில் உள்ள விநாயகா மி‌‌ஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா (27). இவரும் அதே மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். திவ்யாவின் பெற்றோர் மும்பையில் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு மும்பைக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து இருவரும் நேற்று காலை சேலத்திற்கு வந்தனர். வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீரோவில் பார்த்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த 17 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் ரொக்கம், வெள்ளி காசுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த கேமரா, கணினி ஆகியவையும் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

மோப்பநாய்

அவர்கள் வீட்டை சுற்றி பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து சந்தோ‌‌ஷ்குமார் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமி‌‌ஷனர் பூபதிராஜன், இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமையில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அக்கம், பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீடு முழுவதும் சுற்றி வந்தது. பின்னர் வீட்டின் வெளியில் சிறிது நேரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

வழக்குப்பதிவு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காட்டு குமரன் நகர் சாலை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, டாக்டர் தம்பதியினர் பொங்கல் பண்டிகையையொட்டி மும்பைக்கு சென்று உள்ளனர். வெகு நாட்களாக வீடு பூட்டி கிடப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். பின்னர் இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அவர்கள் கொள்ளை யடித்து உள்ளனர் என்று கூறினர்.

சேலத்தில் டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்