சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் நேற்று சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்ட ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-20 22:30 GMT
நாமக்கல்,

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 31-வது சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று நாமக்கல்லில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. நாமக்கல் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் மகளிர் சுயஉதவி குழு பெண்கள் மற்றும் ஊரக பணியாளர்கள் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருச்செங்கோடு சாலை, நேதாஜி சிலை, கடைவீதி வழியாக பூங்கா சாலையில் காவல் துறையினரால் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கத்தை வந்தடைந்தது.

இந்த கண்காட்சி அரங்கத்தில் சாலை பாதுகாப்பு குறியீடுகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது.

கண்காட்சி அரங்கம்

இந்த கண்காட்சி அரங்கத்தையும் போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்து பார்வையிட்டார். இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு போலீசார் தேனீர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், இளமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, மகளிர் திட்ட அலுவலர் டாக்டர் மணி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்