கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் இடத்திலேயே தங்க வேண்டுமா? - அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் இடத்திலேயே தங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-01-20 23:00 GMT
மதுரை, 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த செல்வகுருநாதன், தங்கள் கிராம நிர்வாக அலுவலர் பணி செய்யும் ஊரிலேயே தங்கியிருக்கும்படி உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதி, “கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களிலேயே தங்கியிருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மீது அளிக்கப்படும் புகாரை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் தலைமையில் 2 தாசில்தார்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுபடி பல்வேறு மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அவரது உத்தரவை செயல்படுத்த தடை விதிக்கக்கோரியும் கிராம நிர்வாக அலுவலர்களான திருப்பூர் ராஜகோபால், வெள்ளக்கோவில் செந்தில்குமார், ஈரோடு நாசியனூரை சேர்ந்த கவுதமன், சுரேஷ், கவுரிசங்கர், அழகர்சாமி, எல்.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

தனி நீதிபதி விசாரித்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலர்களிடம் கருத்து கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு காரணத்துக்காகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யலாம். அரசு பணி தொடர்பாக சம்பந்தம் இல்லாதவர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வருவாய் ஆவணங்கள், நில ஆவணங்களை பராமரித்தல், வரி வசூல் செய்வது, பல்வேறு சான்றிதழ்களை வழங்குவது, அரசு நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பல்வேறு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் செய்கின்றனர். பல்வேறு இடையூறுகளை பணிகளின் போது சந்திக்கின்றனர். எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு தங்களின் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் விசாரித்தனர். முடிவில் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை பிப்ரவரி 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்