சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - பெண் கைது

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டனர். மேலும் கடத்தலுக்கு காரணமான பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-01-20 23:00 GMT
சென்னை, 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 21). இவருடைய மனைவி ரன்தேஷா(20). இவர்களுக்கு 7 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. போஸ் மற்றும் அவருடைய மனைவியும் சென்னை மெரினா கடற்கரையில் பலூன் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி பிற்பகலில் பலூன் விற்பனை செய்து கொண்டு இருந்த இவர்களிடம் ஒரு பெண் சினிமாவில் நடிக்க ஒரு குழந்தை வாடகைக்கு தேவைப்படுகிறது என்றும், அதற்காக பணமும் தருகிறேன் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்த அவர்களிடம், அந்த பெண் பெற்றோரிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு டாக்டரிடம் காட்டிவிட்டு வருவதாக கூறி குழந்தையை கடத்தி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்ணின் படத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் அரக்கோணத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி ரேவதி(26) என்பதும், 7 மாத குழந்தையை கடத்தியதும் தெரியவந்தது.

இதுகுறித்து தனிப்படையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:-

கடத்தல் குறித்து விசாரித்தபோது ரேவதிக்கு 2 பெண் குழந்தை பிறந்ததாகவும், 3-வது ஆண் குழந்தை வேண்டும் என்று இந்த குழந்தையை கடத்தியுள்ளார். மேலும் குழந்தை பால் குடிக்காமல் அழுததால் உடல் நிலை சரி இல்லாமல் போனது. இதையடுத்து சிகிச்சைக்காக எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

ரேவதி எழும்பூர் பகுதியில் சுற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதைவைத்து விசாரித்தபோது மருத்துவமனை செவிலியர் ரேவதியை பார்த்ததாக கூறினார். அதன்பின்னர் தான் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து குழந்தையை மீட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்