மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-01-20 23:30 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி முதலியார்பேட்டை உடையார்தோப்பு ஏழைமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது மகன் வேலு(வயது 56). தட்டு வண்டி தொழிலாளி. தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் செல்லும் வழியில் சிறிய அளவில் கோவில் கட்டி வழிபட்டு வந்தார். இவரது மனைவி வள்ளி. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 3.4.2017 அன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேலு தனது மனைவி வள்ளியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை அங்குள்ள புதரில் வீசி விட்டு தனது மனைவி காணாமல் போனதாக நாடகமாடினார்.

இதுகுறித்து வள்ளியின் சகோதரி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேலுவை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சுபா அன்புமணி விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட வேலுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து வேலு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்