வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு

சென்னையில் வாலிபரை ஆட்டோவில் கடத்திச்சென்று படுகொலை செய்து பிணத்தை கல்குட்டையில் வீசிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2020-01-20 23:30 GMT
சென்னை, 

சென்னை திருவல்லிக்கேணி, பி.பி.குளம், 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25). ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்தார். இவர் கடந்த 19-ந் தேதி அன்று இரவு 10 மணி அளவில், ஐஸ்-அவுஸ் நடேசன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், ராம்குமாரை தாங்கள் வந்த ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றுவிட்டனர். ராம்குமார் சத்தம் போடக்கூடாது என்பதற்காக அவரது வாயை பொத்தி விட்டனர்.

பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், ஐஸ்-அவுஸ் நடுக்குப்பம், 5-வது தெருவில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே வைத்து ராம்குமார் மீது சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராம்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

படுகொலை செய்யப்பட்ட ராம்குமாரின் உடலை, அவரை கடத்தி வந்த அதே ஆட்டோவில் கொலையாளிகள் ஏற்றிச்சென்றனர். சென்னையை அடுத்த கோவளம் கடற்கரைக்கு உடலை கொண்டு சென்றுள்ளனர். கோவளம் கடலோர காவல்படை போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள கல்குட்டையில் ராம்குமாரின் பிணத்தை வீசி இருக்கிறார்கள். பின்னர் கொலையாளிகள் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த நிலையில், ராம்குமாரின் தந்தை குருமூர்த்தி தனது மகனை கடத்திச்சென்று விட்டனர் என்று கொடுத்த புகாரின் பேரில், ஐஸ்-அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட ராம்குமாரின் உடலை மீட்டு கேளம்பாக்கம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 15-ந் தேதி பொங்கல் பண்டிகை தினத்தன்று, கொலை செய்யப்பட்ட ராம்குமார் நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரை குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதாக தெரிகிறது. இதில் பிரேம்குமார் காயம் அடைந்துள்ளார்.

அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பிரேம்குமாரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, ராம்குமாரை கடத்திச்சென்று தீர்த்துக்கட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், பிரேம்குமாரையும், அவரது கூட்டாளிகளையும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த படுகொலை சம்பவம் ஐஸ்-அவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்