தூத்துக்குடியில் இன்சூரன்சு நிறுவனம் முன்பு விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

தூத்துக்குடியில் இன்சூரன்சு நிறுவனம் முன்பு விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-01-21 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டு விவசாயிகள் பல்வேறு பயிர்களுக்கு தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசின் இன்சூரன்சு நிறுவனத்தில்(நியூ இந்தியா அஸ்யூரன்சு) காப்பீடு தொகை செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக விவசாயிகளுக்கு இன்சூரன்சு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பாண்டியன் கிராம வங்கியில் சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கு வைத்து உள்ளனர். இந்த வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டதால், வங்கி கணக்கு எண் மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய வங்கி கணக்கு எண்ணை இன்சூரன்சு நிறுவனத்தில் செலுத்தினால் மட்டுமே விவசாயிகளின் வங்கி கணக்கில் காப்பீடு தொகை வரவு வைக்க முடியும். இதனால் விவசாயிகள் தூத்துக்குடியில் உள்ள இன்சூரன்சு நிறுவனத்தில் வங்கி கணக்கு எண்ணை கொடுத்து வருகின்றனர்.

முற்றுகையிட்டு போராட்டம்

நேற்று 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கு எண்ணை கொடுப்பதற்காக வந்தனர். அப்போது, இன்சூரன்சு நிறுவனத்தில் திங்கட்கிழமை மட்டுமே வங்கி கணக்கு எண்ணை பெற்று பதிவு செய்வதாக தெரிவித்தார்களாம். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், நாங்கள் விவசாய பணிகளை விட்டு விட்டு நீண்ட தொலைவில் இருந்து வந்து உள்ளோம். எங்களிடம் வங்கி கணக்கு எண்களை உடனடியாக பெற வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்சூரன்சு நிறுவன அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து வங்கி கணக்கு எண் விவரங்களை பெற்றுக் கொண்டனர். அதன்பிறகு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும் போது, 10 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்வதற்கு 3 மாதங்கள் வரை காலதாமதம் ஆகும். ஆகையால் தாலுகா வாரியாக முகாம் அமைத்து விவசாயிகளிடம் விவரங்களை சேகரிக்க வேண்டும். இன்சூரன்சு நிறுவனத்திலும் தனியாக அதிகாரி நியமித்து வங்கி கணக்கு எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்