அடுத்த ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்த அரசு ரூ.75 லட்சம் நிதி உதவி அளிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

அடுத்த ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்த அரசு ரூ.75 லட்சம் நிதி உதவி அளிக்கும் என்று புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2020-01-21 23:00 GMT
சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்து வந்த 43-வது புத்தக கண்காட்சியை கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், சினிமா, அரசியல் பிரமுகர்கள், புத்தக பிரியர்கள் என பலரும் வந்து கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை ஆர்வத்தோடு வாங்கி சென்றனர்.

கடந்த 13 நாட்களாக நடந்த புத்தக கண்காட்சியில் திருவிழா போல் கூட்டம் அலைமோதியது. நிறைவு நாளான நேற்றும் புத்தக கண்காட்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணியுடன் புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது.

பதிப்புத்துறை விருது

புத்தக கண்காட்சியின் நிறைவு விழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நேற்று நடந்தது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கலந்து கொண்டு 25 ஆண்டுகள் பதிப்புத்துறையில் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பதிப்பாளர்கள் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், திருக்குறள், ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை அவர் வழங்கினார்.

ரூ.75 லட்சம் நிதி உதவி

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

உலகில் புகழ்பெற்ற அறிஞர்கள், தலைவர்கள் அனைவரும் நூல் வாசிப்பின் மூலமே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்டனர். நம் வாழ்வில் புத்தக வாசிப்பு மிகவும் முக்கியமானது. அதனால் புத்தக வாசிப்பு என்பதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.

இளம் எழுத்தாளர்கள் வாழ்வில் ஏற்படும் புறக்கணிப்புகள், அவமானங்கள், தடைகளை தகர்த்து சோர்ந்து விடாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். பபாசி புத்தக காட்சியை தொடர்ந்து நடத்துவதன் மூலம், சமூகத்துக்கு சிறந்த பணியை ஆற்றி வருகிறது. அவர்களுக்கு, உதவும் விதமாக அடுத்த ஆண்டு முதல் புத்தக காட்சி நடத்த தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்படும். அதனுடன் தனிபட்ட முறையில் எனது பங்களிப்பாக ரூ.5 லட்சம் வழங்குகிறேன்.

மேலும், கன்னிமாரா நூலகத்தில் அமைந்துள்ள நிரந்தர புத்தக கண்காட்சிக்கான வாடகையை ரத்து செய்யவும் தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.20 கோடிக்கு விற்பனை

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் தலைவர் சண்முகம் கூறியதாவது:-

புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு வாசகர்கள் அதிக வரவேற்பு அளித்துள்ளனர். சுமார் 15 லட்சம் பேர் புத்தக கண்காட்சிக்கு வந்துள்ளனர். அவர்களில் 6 லட்சம் பேர் குழந்தைகள், மாணவர்கள் ஆவார்கள். சராசரியாக கண்காட்சியில் 13 லட்சம் புத்தகங்கள் ரூ.20 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.15 கோடி அளவுக்கு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.5 கோடி கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்