குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி விரைந்து முடிக்கப்படும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைந்து முடிக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2020-01-22 22:45 GMT
தூத்துக்குடி, 

குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. தற்போது அங்கு ஆரம்ப கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஏவுதளம் அமைப்பதற்காக 2 ஆயிரத்து 350 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும், ஒரு தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

இவர்கள் நிலத்தை அளவீடு செய்து, அறிவிக்கை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பிறகு நிலத்தை கையகப்படுத்தி இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்படும். நிலம் கையகப்பபடுத்தும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 6 முதல் 8 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அங்கு ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை போர்டு எதுவும் வைக்கப்படவில்லை. இது ஒப்பந்தக்காரரின் தவறு. அவரை அழைத்து முறையாக போர்டு வைக்க அறிவுறுத்தி உள்ளோம். அதே நேரத்தில் மேம்பாலம் அமைப்பதற்கு ரெயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய அனுமதி அளிக்க வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்