பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழ்வழியில் நடத்த வேண்டும் உரிமை மீட்புக்குழு மாநாட்டில் வலியுறுத்தல்

பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழ்வழியில் நடத்த வேண்டும் என்று தஞ்சையில் நடந்த உரிமை மீட்புக்குழு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2020-01-22 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உரிமை மீட்புகுழு சார்பில் பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் வழியில் நடத்திட வேண்டுகோள் மாநாடு தஞ்சையில் நேற்று நடந்தது. களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை பாடல்களுடன் மாநாடு தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பெரியகோவில் உரிமை மீட்புக்குழு தலைவர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

இதில் அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சாமிநாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் மூங்கிலடியார் பொன்னுசாமி, குடந்தை இமயவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் தமிழ் குடமுழுக்கு-ஆகமம்-சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சரபோஜி கல்லூரி பேராசிரியர் பாரி தலைமையில் நடந்தது.

நிறைவரங்கம்

மாலையில் நிறைவரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் பாரதிச்செல்வன் தலைமை தாங்கினார். வக்கீல் நல்லதுரை, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், வீரத்தமிழர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிறைவுரையாற்றினார்.

இந்த மாநாட்டில் சத்யவேல் முருகனார், சத்யபாமா அறக்கட்டளை நிறுவனர் சத்யபாமா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் ஆர்வலர்கள், சிவனடியார்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை என்ஜினீயர் ஜான்கென்னடி ஒருங்கிணைத்தார். முடிவில் தமிழ்தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு தமிழக அரசு வருகிற பிப்ரவரி 5-ம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடத்துவதை வரவேற்கிறோம். தென்னாடுடைய சிவனாருக்கு செய்யும் அத்திருக்குடமுழுக்கை தீந்தமிழ் மந்திரங்கள் ஓதி செய்யாமல் ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில் தமிழ் மண்ணில் செய்ய முனைவது தமிழர் ஆன்மிகத்தையும், தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் புறக்கணிக்கும் இன ஒதுக்கல் செயலாகும்.

தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசே அவ்வாறான தமிழ் இன ஒதுக்கல், தமிழ் மொழி ஒதுக்கல் செயலில் ஈடுபடக்கூடாது. தமிழ்நாட்டில் கோவில் கருவறை அர்ச்சனைகளை சம்ஸ்கிருத மொழியில்தான் செய்ய வேண்டும். தமிழ் மொழியில் செய்யக்கூடாது என்ற தடைச்சட்டம் எதுவுமில்லை. மாறாக தமிழ் மந்திரங்களை ஓதி கருவறை பூஜை செய்வதற்கும் குடமுழுக்கு செய்வதற்கும் ஆதரவாக அரசு ஆணையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இருக்கின்றன.

தடை விதிக்கவில்லை

அவற்றின்படிதான் தமிழ்நாடு அரசு கருவறை பூஜை மொழியாகத் தமிழை அறிவித்து, சிவநெறி, திருமால் நெறி பூஜைக்கான தமிழ் மந்திரங்களை நூல்களாக வெளியிட்டுள்ளது. அவற்றைக்கொண்டு பாடம் நடத்தி அர்ச்சகர்களுக்கு தேர்வு நடத்தி, தகுதியானவர்கள் அர்ச்சகர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பில் குறிப்பிட்ட சாதியை தவிர மற்ற சாதியினர் அர்ச்சகர் ஆகக்கூடாது என எந்த ஆகமமும் தடை விதிக்கவில்லை என நீதிபதிகள் தெளிவாக கூறியிருக்கின்றனர். இதேபோல, குறிப்பிட்ட மொழியில்தான் கருவறை பூஜை செய்ய வேண்டும் என ஆகமங்கள் நிபந்தனை விதிக்கவில்லை என்பதையும் அத்தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தமிழ் வழியில் நடத்த வேண்டும்

தமிழர் ஆன்மிக மரபுப்படி தமிழில் குடமுழுக்கு நடத்த மரபுத்தடை எதுவுமில்லை. தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பிய தமிழ் பேரரசன் ராஜராஜன், சிதம்பரத்தில் தீட்சிதர்கள் பதுக்கி மறைத்து வைத்திருந்த தேவார திருமுறைகளை மீட்டு, திருமுறை கண்ட சோழன் என்ற சிறப்பு பட்டம் பெற்றவராவார். பெருவுடையார் கருவறையில் தொடங்கி பல்வேறு இடங்களில் அர்ச்சனை மற்றும் வழிபாட்டு சடங்குகள் செய்வதற்கு தலைமை பூசாரியாக பவனப்பிடாரன் என்ற தமிழ் மரபை சேர்ந்தவரை ராஜராஜ சோழன் அமர்த்தினார். அவர் தலைமையில் பிடாரர்கள் என்ற பல்வேறு சாதிகளை சேர்ந்த தமிழ் ஓதுவார்கள் 48 பேரையும் நியமித்தார்.

ஒரு மொழி, இனத்தின் தாய் மண்ணில் அம்மொழியை புறக்கணித்து அயல் மொழியை திணிப்பது, மண்ணின் தாய் மொழியை அழிப்பதாகும். அம்மண்ணின் இனத்தை அயல் மொழியார் அடிமைப்படுத்தும் செயலாகும். எனவே, அயல் மொழியான சம்ஸ்கிருத ஆதிக்கத்துக்கும், ஆக்கிரமிப்புக்கும் தமிழ்நாடு அரசு துணைபோக வேண்டாம். சட்டம் வழங்கும் உரிமைகள் அடிப்படையிலும், தமிழர் ஆன்மிக மரபுப்படியும் தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்துமாறு தமிழ்நாடு அரசைக்கேட்டுக் கொள்கிறோம்.

மாற்ற வேண்டும்

தஞ்சை பெருவுடையார் கோவில் பரம்பரை அறங்காவலர் பொறுப்பில் இருந்து மராட்டிய போன்ஸ்லேயை நீக்கி கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறையே நேரடியாக மேற்கொள்ள வேண்டும்.

தஞ்சை பெருவுடையார் என்பதை பிரகதீஸ்வரர் என்றும், இறைவி பெரியநாயகி என்பதை பிரகன்நாயகி எனவும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டனர். திருஆக்கூர் தான்தோன்றியப்பர் என்பதை சுயம்புநாதர் என்றும், ராமேசுவரம் மலைவளர்காதலி என்பதை பர்வதவர்த்தினி என்றும், திருக்காட்டுப்பள்ளியின் தீயாடியப்பர் என்பதை அக்னீஸ்வரர் என்றும், திருக்கருகாவூர் கருகாத்த அம்மை என்பதை கர்ப்பரட்சாம்பிகா எனவும் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டனர்.

தமிழ்க்கடவுள் முருகனையே சுப்பிரமணியன் என ஆக்கினர். திருவரங்கம் என்பது ஸ்ரீரங்கம் என்றும், திருமுதுகுன்றம் என்பது விருத்தாசலம் எனவும், மறைக்காடு என்பது வேதாரண்யம் என்றும் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட தமிழ் கடவுள் பெயர்களையும், ஆன்மிக ஊர்ப்பெயர்களையும் மீண்டும் தமிழுக்கு மாற்றி அறிவிக்க வேண்டும்.

பணியமர்த்த வேண்டும்

இந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி பயிற்சி பெற்ற தமிழ் அர்ச்சகர்கள் அதற்குரிய ஆகம தகுதித்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழுடன் அர்ச்சகர் பணியில் அமர்த்தப்படாமல் பல ஆண்டுகளாகக் காத்து கிடக்கின்றனர். அறநிலையத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாட்டுத் திருக்கோவில்களில் இந்த இளைஞர்களை அர்ச்சகர்களாக பணியமர்த்த அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்