தஞ்சை வேலம்மாள் பள்ளியில் வருமானவரித்துறையினர் 2-வது நாளாக சோதனை

தஞ்சை வேலம்மாள் பள்ளியில் வருமான வரித்துறையினர் நேற்று 2-வது நாளாக சோதனை நடத்தினர். இதனால் மாணவர்களை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-22 23:15 GMT
தஞ்சாவூர்,

வேலம்மாள் கல்வி நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதிலும் இந்த சோதனை திடீரென நடத்தப்பட்டது.

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேலம்மாள் பள்ளியிலும் இந்த சோதனை நடந்தது. மதியம் 12.15 மணிக்கு காரில் வந்த 4 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

2-வது நாளாக சோதனை

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று 5 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரையிலும் இந்த சோதனை நீடித்தது. வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை அடுத்து வேலம்மாள் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

பாடம் எதுவும் நடத்தப்படாததால் அங்கு மாணவ, மாணவிகள் விளையாடினர். விளையாட்டு விழா எதுவும் நடத்தப்படாத நிலையில் மாணவ, மாணவிகள் விளையாட்டு அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்