பாலிடெக்னிக் கல்லூரி அருகே பஸ்கள் நிற்காததை கண்டித்து மாணவர்கள் மறியல்

பாலிடெக்னிக் கல்லூரி அருகே பஸ்கள் நிற்காததை கண்டித்து மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-22 23:00 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில், அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில், இப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் பஸ்சில் வந்து கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த வழியாக சென்று வரும் பஸ்கள் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று வந்தன. இதுகுறித்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் மாணவர்கள் எடுத்து கூறியும் அவர்கள் இங்கெல்லாம் நிறுத்த முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால், கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் மாணவர்கள் இறங்கி சுமார் 2 கிலோமீட்டர் நடந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

சாலை மறியல்

வழக்கம்போல நேற்றும் பஸ்கள் நிற்காமல் சென்றன. இதனால் அத்திரமடைந்த மாணவர்கள் இதனை கண்டித்தும், கல்லூரி அருகே பஸ்கள் நின்று செல்லக்கோரியும் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து போக்கு வரத்து அதிகாரிகளிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்