விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2020-01-22 23:00 GMT
கரூர்,

தமிழக போக்குவரத்துத் துறையின் சார்பில், கரூர் மாட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் 31-வது சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் தமிழக அரசு போக்கு வரத்துத்துறை மற்றும் பள்ளி கல்லூரி ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 20-ந்தேதி முதல் வருகிற 27-ந்தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கடை பிடிக்கப்படுகிறது. சாலை விபத்துகளை குறைத்ததில் தேசிய அளவில் முதல் பரிசிற்கான மத்திய அரசின் விருதினை தமிழக போக்குவரத்துத்துறை பெற்றிருக்கின்றது. தமிழக அரசின் சார்பில் அந்த விருதை பெற்றுக்கொண்டதில் பெருமைப்படுகின்றேன் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்

மருத்துவ முகாமில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி-கல்லுாரி பேருந்து ஓட்டுனர்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவப்பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பேருந்துகளில் அதிக அளவு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்வதால் ஓட்டுனர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். ஆண்டு தோறும் கண் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ளதுபோல தமிழகத்தில் முதல் கட்டமாக ரூ.25 கோடி நிதியில் திருச்சி முதல் செங்கல்பட்டு வரை சாலை விதிகள் மீறுவோர் மீது தானியங்கி அபராதமுறை கொண்டுவரப்பட உள்ளது. அதற்காக 54 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அபராதம் விதிக்கப்பட்டவர் தொகையை செலுத்தினால் தான் வாகனத்தை விற்கவோ, வாகன தகுதி சான்றிதழ் பெறவோ முடியும் என்ற வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி அரசு சட்டம் இயற்றலாம். அதை பொது மக்கள் கடைபிக்க வேண்டும். தனிநபர் ஒழுக்கம் இருந்தால் தான் நாட்டில் எதையும் சாதிக்கலாம.் எனவே சாலை பாதுகாப்பு விதிகளை தெரிந்து கொண்டு அதை கடைபித்து விபத்து மற்றும் உயிரிழப்பு இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து போக்குவரத்துறையில் விபத்து இல்லாமல் பேருந்துகளை இயக்கிய ஓட்டுனர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ஹெல்மெட்டுகளை வழங்கி அமைச்சர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், திருச்சி சரக துணைப் போக்குவரத்து ஆணையர் உதயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) ஆனந்த், மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளர் குணசேகரன், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் கண்ணதாசன், துணைத்தலைவர் முத்துகுமார், கரூர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் காமராஜ், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி

கரூர் மாவட்ட போக்குவரத்து போலீஸ் சார்பில் பஸ் நிலையம் அருகில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வரவேற்று பேசினார். கண்காட்சியை பார்வையிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசினார். இதில், போக்குவரத்து போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்