விசாரணைக்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு

பஞ்சப்பள்ளி அருகே விசாரணைக்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த இளம்பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-22 22:15 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 45). இவர் மாரண்டஅள்ளி இந்தியன் வங்கியில் வீடு கட்டுவதற்கு ரூ.30 லட்சம் கடனாக வாங்கி இருந்தார். ஆனால் அவர் கடனை முழுமையாக திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இவரை பலமுறை தொடர்பு கொண்டும் முடியவில்லை என தெரிகிறது.

இதனால் வங்கி மேலாளர் புவனேஸ்வரி (43), ஊழியர்களுடன் ராஜகோபால் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்டச்சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறின் போது, ராஜகோபால் வங்கி பெண் மேலாளரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் ராஜகோபாலை கைது செய்தனர்.

2 பேர் மீது வழக்கு

இந்தநிலையில் ராஜகோபாலின் கார் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் மூலம் பயன்படுத்துவதாகவும், அது திருட்டு காராக இருக்கலாம் என்றும் பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் கும்மனூரில் உள்ள ராஜகோபால் வீட்டுக்கு கார் குறித்து விசாரணை நடத்த சென்றனர். அப்போது ராஜகோபாலின் 18 வயது மகள் மற்றும் உறவினர் சீனிவாசன் ஆகியோர் போலீசாரை வீட்டுக்குள் விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் திரும்பி வந்து விட்டனர்.

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக ராஜகோபாலின் மகள், உறவினர் சீனிவாசன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்