‘கிராமசபை கூட்டத்தை வீடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்’ மக்கள் நீதி மய்யத்தினர் கலெக்டரிடம் மனு

குடியரசு தினத்தையொட்டி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தை வீடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யத்தினர் மனு கொடுத்தனர்.

Update: 2020-01-22 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் ஜீவா மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியலமைப்பு சட்டம் 243 ஏ தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்டம் 1994-ன் படி, வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெறுவதையும், அது முறையாக நடத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். கிராமசபை கூட்டத்துக்கு அனைவருக்கும் அழைப்பு தர வேண்டும். இதனை அனைவரும் அறிய செய்ய வேண்டும்.

நடவடிக்கை

இதுவரை நடந்த வரவு-செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை, திட்ட அறிக்கை என அனைத்து ஆவணங்களும் மக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவிட வேண்டும். கிராமசபை கூட்டத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்துதல் வேண்டும். கிராம நலன் கருதி மக்கள் வைக்கும் தீர்மானங்களை பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டு கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரது கையெழுத்தும் பெறப்பட வேண்டும். தீர்மானநகல் கேட்கும் நபர்களுக்கு தாமதமின்றி வழங்கவும் உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்