கோவையில் வாகன சோதனை: கேரளாவை கலக்கிய 2 கொள்ளையர்கள் கைது - பாலக்காடு போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்

கோவையில் நடந்த வாகன சோதனையின்போது கேரளாவை கலக்கிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை பாலக்காடு போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

Update: 2020-01-23 21:45 GMT
கோவை,

கோவையில் உள்ள ஒப்பணக்கார வீதியில் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். அதில், அவர்கள் கேரள மாநிலம் வடக்கஞ்சேரியை சேர்ந்த கிரன் (வயது 20), புட்டான் என்கிற சிபு (40) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார், அவர்கள் 2 பேரிடம் நடத்திய விசாரணையில், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு இருப்பதும், அவர்கள் 2 பேரும் கேரளாவை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2 பேரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கிரன், சிபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இது குறித்து பாலக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் கோவைக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் கோவையில் கைது செய்த 2 பேரை போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து பாலக்காடு போலீசார் கிரன், சிபு ஆகிய 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, கோவையில் சிக்கிய கிரன், சிபு ஆகியோர் மீது வீடு புகுந்து திருடுதல், கொள்ளைடித்தல், மோட்டார் சைக்கிள் திருடுதல் உள்பட பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. ஒரு இடத்தில் திருடும் மோட்டார் சைக்கிளை வேறு பகுதிக்கு சென்று விற்றுவிட்டு கேரளா செல்வார்கள். அவர்கள் 2 பேரையும் பாலக்காடு போலீசார் தேடி வந்த நிலையில், இருவரும் கோவையில் சிக்கி உள்ளனர் என்றனர்.

மேலும் செய்திகள்