கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்

கடம்பூரில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்த மீன் வியாபாரி தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-01-23 23:15 GMT
கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் தொடங்கும் இடத்தில் நேற்று காலையில் ஆண் ஒருவர் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரெயில் சென்றபோது, ரெயில் என்ஜின் டிரைவர் பிணத்தை பார்த்து கடம்பூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே, தூத்துக்குடி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, வாலிபரின் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபரின் சட்டைப்பையில் வாக்காளர் அடையாள அட்டை, ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவை இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், இறந்தவர் சாத்தான்குளம் அருகே சுப்புராயபுரம் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சுதாகர் (வயது 36) என்பது தெரியவந்தது. இவர் கோவையில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவருடைய தந்தை தங்கராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

சுதாகருக்கு 2 அண்ணன்கள், 2 அக்காள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

சுதாகரின் தாயார் சிவந்திகனி, சொந்த ஊரில் தனியாக வசித்து வருகிறார். எனவே, அவரை பார்ப்பதற்காக சுதாகர் நேற்று முன்தினம் இரவில் கோவையில் இருந்து மதுரைக்கு பஸ்சில் புறப்பட்டு வந்தார்.

பின்னர் அவர், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலையில் நெல்லை வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏறி பயணம் செய்தார்.

அப்போது ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ரெயில் பெட்டியின் வாசல் அருகில் அமர்ந்து சுதாகர் பயணம் செய்துள்ளார். கடம்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காமல் செல்லும். கடம்பூர் ரெயில் நிலையத்துக்குள் ரெயில் நுழைந்தபோது, தண்டவாளங்கள் இணையும் இடத்தில் குலுங்கியதில், ஓடும் ரெயிலில் இருந்து சுதாகர் தவறி விழுந்தார். இதில் தண்டவாளத்தில் விழுந்த அவர் மீது ரெயில் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்