பிரபல பெண் தாதா எழிலரசி குண்டர் சட்டத்தில் கைது

காரைக்காலில் பிரபல பெண் தாதா எழிலரசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-24 00:00 GMT
காரைக்கால், 

காரைக்கால் திருமலைராயன்பட்டினத்்தைச் சேர்ந்தவர் ராமு. சாராய வியாபாரி. இவருக்கு வினோதா, எழிலரசி (வயது40) ஆகிய 2 மனைவிகள் இருந்தனர்.

ராமு தனது சொத்துகளை எழிலரசிக்கு எழுதி வைத்ததால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவி வினோதாகடந்த 2013-ம் ஆண்டு கூலிப்படையை வைத்து ராமுவை கொலை செய்தார். வெட்டு காயங்களுடன் எழிலரசி தப்பினார். இதற்கு பழிக்குப்பழியாக திருமலைராயன்பட்டினம் அய்யப்பன் 8.7.2013 அன்று கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார்.

அதனைதொடர்ந்து 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீர்காழி அருகே வினோதாவை கூலிப்படையினர் கொலை செய்தனர். இதே பாணியில் ராமு கொலைக்கு உடந்தையாக இருந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கடந்த 3.1.2017 அன்று நிரவியில் கொலை செய்யப்பட்டார்.

கணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக மேலும் சிலரை கொலை செய்ய எழிலரசி திட்டமிட்டதையடுத்து காரைக்காலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை அப்போது போலீசார் கைது செய்தனர்.

ஒரு ஆண்டுக்குப் பின் வெளியே வந்த எழிலரசி, காரைக்கால் நேதாஜி நகரில் தங்கி, திருமலைராயன்பட்டினம் தொகுதி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்தநிலையில் சிலரை கொலை செய்யும் நோக்கில் எழிலரசி சதி திட்டம் தீட்டி வந்ததாகவும், எதிர்தரப்பினர் எழிலரசியை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் காரைக்காலில் தகவல்கள் பரவியது.

இதனால் மீண்டும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி எழிலரசியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன், மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜாவுக்கு பரிந்துரை செய்தார்.

மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நிரவி போலீசார் நேதாஜி நகரில் தங்கி இருந்த எழிலரசியை நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அவரை அங்கிருந்து புதுச்சேரி சிறைக்கு கொண்டு சென்றனர். எழிலரசி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவது இது 2-வது முறை என்பது குறிப்பிடக்தக்கது.

மேலும் செய்திகள்