தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

Update: 2020-01-25 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி பத்திநாதபுரம் லூசியா மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். அவர் ரூ.2.84 லட்சம் மதிப்பில் 36 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியை பார்வையிட்டு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. சக்கர நாற்காலி மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களும் அரசின் ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்டாலும், கூடுதலாக தேவைப்படுவோர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களின் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு கடனுதவி திட்டங்கள் உள்ளன. எவ்வித ஆவணம் இன்றி ரூ.1 லட்சம் வரையிலான கடனுதவி திட்டத்தில் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி கடனுதவிகளும் வழங்கிட ஆவணம் செய்யப்படும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 12 மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்து நடத்தும் ஓட்டல் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்து தொழில் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.

வருகிற மார்ச் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்காக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கிராம ஊராட்சி அலுவலகங்களின் மூலம் வருகிற 3–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்