குடியரசு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

திருவள்ளூரில் குடியரசு தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், 113 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2020-01-26 22:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குகலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் அனைவருக்கும் சால்வை அணிவித்தும், பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய கலெக்டர், முன்னாள் படைவீரர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய் துறை , வேளாண்மை துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, தோட்டக் கலை துறை போன்ற துறைகள் மூலம் மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 76 லட்சத்து 64 ஆயிரத்து 521 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் தமிழக முதல்- அமைச்சரின் காவலர் பதக் கங்களை 23 போலீசாருக் கும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. வித்யா, திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பாண்டியராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் சந்தானம் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதேபோல திருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

அதேபோல கடம்பத்தூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கடம்பத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, மேலாளர் சுப்பிரமணி மற்றும் திரளான ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிப்பட்டு

பள்ளிப்பட்டு தாலுகாவில் குடியரசு தினவிழாவையொட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை செயல் அலுவலர் கலாதரன் ஏற்றி வைத்தார். பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் தேசிய கொடி ஏற்றினார்.

பொதட்டூர்பேட்டை காந்திசிலை, காமராஜர் சிலைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. இ.எஸ். எஸ்.இராமன் மாலை அணிவித்து தேசியகொடி ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தேசிய கொடி ஏற்றினார்.

எல்லாபுரம்

எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை கே.ரமேஷ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் அம்மினி மகேந்திரன், சித்ரா முனுசாமி, ஒன்றிய துணை பெரும் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குழந்தைவேலு, சரவணன், தட்சிணாமூர்த்தி, ஜமுனாஅப்புன், கோகிலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மீஞ்சூர்

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் ரவி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் ஆணையாளர் சிவகுமார் இனிப்புகளை வழங்கினார். அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி தலைவர் சுகந்திவடிவேல் தேசிய கொடியை ஏற்றிவைத்தையடுத்து, துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் இனிப்புகளை வழங்கினார். வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷாஜெயக்குமார், கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தேசிய கொடிகளை ஏற்றி வைத்தனர்.

பூந்தமல்லி

குடியரசு தினவிழாவை முன்னிட்டு பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பாரிவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாரிவாக்கம் தணிகாசலம் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி

குடியரசு தினத்தை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் மாலினி தேசிய கொடியை ஏற்றி வைத்து இலங்கை அகதி முகாமைச்சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமாரும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் (பொறுப்பு) நரேந்திரன், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தேசிய கொடியை ஏற்றினார். செயலாளர் ரமேஷ்குமார் பொருளாளர் முனுசாமி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரவிசந்திரபாபு ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

மேலும் செய்திகள்