பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் உருக்கமாக எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

Update: 2020-01-26 23:15 GMT
பூந்தமல்லி, 

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரவீனா பானு(வயது 16). உறவினர் வீட்டில் வசித்துவந்த இவர், அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிரவீனா பானு, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பிரவீனா பானு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், தூக்கில் தொங்கிய மாணவி பிரவீனா பானு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், பிரவீனாபானு சிறு வயதில் இருக்கும்போதே அவருடைய தாய் இறந்து விட்டார். அதன்பிறகு அவருடைய தந்தை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அனாதையாக நின்ற பிரவீனா பானுவை அவரது உறவினர்கள் எடுத்து வளர்த்து வந்தனர். பெற்றோர் இல்லாததால் பிரவீனா பானு, ஏக்கத்தில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடந்தது. இதில் சக மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். மேலும் சகமாணவர்கள் தங்கள் பெற்றோர் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

இதை பார்த்த பிரவீனா பானு, தனக்கு பெற்றோர் இல்லையே? என்ற ஏக்கத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும், தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரது அறையில் போலீசார் சோதனை செய்தபோது, மாணவி எழுதிய கடிதம் சிக்கியது. அதில் அவர், “ எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என்னை உறவினர்கள் நன்றாக பார்த்துக்கொண்டனர். இருந்தாலும் தாயைப்போல் யாரும் இருக்க முடியாது” என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்