லாரி டிரைவரை கொன்று வழிப்பறி செய்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

லாரி டிரைவரை கொன்று வழிப்பறி செய்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2020-01-27 22:15 GMT
கிருஷ்ணகிரி,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள வீரசெட்டிப்பள்ளியை சேர்ந்தவர் நாகையன். இவரது மகன் ரவிக்குமார் (வயது 30). லாரி டிரைவர். இவர் கடந்த 10.7.2013 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு, அலுமினிய பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை அம்பத்தூருக்கு புறப்பட்டுள்ளார். அப்போது கெலமங்கலம் அருகே உள்ள ஜக்கேரியை சேர்ந்த அருண்குமார் (33), தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தேக்கல்நாய்க்கன்பட்டியை சேர்ந்த தமிழரசு (31) ஆகியோர் ரவிக்குமாரிடம் வாணியம்பாடி வரையில் தாங்கள் வருவதாக லாரியில் ஏறி உள்ளனர்.

கந்திகுப்பம் அருகில் வந்த போது அருண்குமாரும், தமிழரசும் சேர்ந்து லாரி டிரைவர் ரவிக்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை சாலையோரம் வீசினார்கள். பின்னர் லாரியில் இருந்த பொருட்களை ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த இரும்பு வியாபாரி ஷேக் அஸ்லாம் (56) என்பவரிடம் விற்றனர். இதைத் தொடர்ந்து லாரியை சேலம் – நாமக்கல் சாலையில் மல்லூர் அருகில் நிறுத்தி சென்றனர்.

இது தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், தமிழரசு, இரும்பு வியாபாரி ஷேக் அஸ்லாம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட அருண்குமார், தமிழரசு ஆகிய 2 பேருக்கும் கொலை வழக்கிற்கு தலா ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், வழிப்பறி செய்த வழக்கில் 14 ஆண்டுகள் (ஆயுள்) சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. திருட்டு பொருட்களை வாங்கிய இரும்பு வியாபாரி ஷேக் அஸ்லாமிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கர் ஆஜர் ஆகி வாதாடினார்.

மேலும் செய்திகள்