அம்மாபேட்டை காவிரி ஆற்றில் விடிய விடிய மணல் கடத்தல் - அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார்

அம்மாபேட்டை காவிரி ஆற்றில் விடிய விடிய மணல் கடத்தப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

Update: 2020-01-27 22:15 GMT
அம்மாபேட்டை,

அம்மாபேட்டை காவிரி ஆற்றில் விடிய விடிய பொக்லைன் எந்திரம் மூலம் கடந்த 2 நாட்களாக மணல் கடத்தப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

அம்மாபேட்டையில் உள்ள ஊமாரெட்டியூர் சுடுகாட்டுத்துறை காவிரி ஆற்று படுகையில் அதிக அளவில் மணல் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு 10 மணிக்கு மேல் ஒரு பொக்லைன் எந்திரம் மற்றும் 10 டிராக்டர்கள் காவிரி ஆற்று பகுதிக்கு செல்கிறது. பின்னர் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் மணலை கடத்துகின்றனர்.

மறுநாள் அதிகாலை 4 மணி வரை விடிய விடிய மணல் கடத்தப்படுகிறது. இதுபற்றி டிராக்டர் டிரைவர்களிடம் ேகட்டால், கோவிலுக்கு மணல் அள்ளுவதாக கூறுகின்றனர். கோவிலுக்கு அதிகபட்சம் 20 யூனிட் வரை இருந்தாலே போதுமானது. ஆனால் அவர்கள் விடிய விடிய மணல் அள்ளுவதை பார்த்தால் கடத்தி விற்க போகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

இதுபற்றி உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கூறியுள்ளார்கள். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அம்மாபேட்டை காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க யாருமே இல்லையா? என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனைப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்