சேலத்தில் பரபரப்பு, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து; கணவர் கைது

சேலத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-27 22:30 GMT
சேலம், 

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் வேதபிறவி (வயது 40). இவர், கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய முதல் கணவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாகவும், இதனால் அவர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மலையப்பன் (50) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.

மலையப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த வேதபிறவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து அவர் தனது தாய் மற்றும் சகோதரியை பார்க்கவேண்டும் என்று கணவரிடம் அடிக்கடி கேட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மலையப்பனுக்கும், வேதபிறவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மலையப்பன், மனைவி வேதபிறவியின் கை பகுதியில் கத்தியை எடுத்து குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஆபாசமாக திட்டுதல், கொலை முயற்சி, தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலையப்பனை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்