குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கரூரில், தீண்டாமை சுவரை அகற்றக்கோரி மனு

கரூரில், தீண்டாமை சுவரை அகற்றக்கோரி மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2020-01-27 22:15 GMT
கரூர், 

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 205 மனுக்களை பெற்றார்.

கரூர் மாவட்ட சீர்மரபினர் நலசங்கம் சார்பில் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்கம் மாநில இணை பொது செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் ராக்கி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில், மத்திய அரசானது கடந்த 2015-ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைப்படி ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் உட்பிரிவு செய்து டி.என்.டி. மக்களுக்கு 9 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உறுதியளித்தது. இதனை நிறைவேற்றும் பொருட்டு கடந்த 2017-ல் ஓ.பி.சி. உட்பிரிவு பட்டியலை 12 வாரத்தில் சமர்ப்பிக்க நீதிபதி ரோகினி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் எந்தவித காரணமுமின்றி அந்த ஆணையத்துக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. அது வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அதனை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்வதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. எனவே அந்த ஆணையத்திற்கு கால அவகாசத்தை நீட்டிக்காமல் டி.என்.டி. மக்களுக்கு ஓ.பி.சி.சியில் 9 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். இல்லையெனில் அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தனர்.

மண்மங்கலம் வட்டம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியவடுகப்பட்டி பகுதியில் கேட்பாரற்று தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. மேலும் இரவு நேரங்களில் பட்டியில் அடைத்து வைக்கப்படுகிற ஆடுகளை கடித்து கொன்று விடுகின்றன. எனவே வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதுடன், நாய் கடித்ததால் இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

திருமுக்கூடலூரை சேர்ந்த சித்ரா அளித்த மனுவில், எங்கள் தெருவில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே இதனை அகற்றுவதோடு உரிய வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தார். கரூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் அளித்த மனுவில், கரூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் வழங்கிட அரசு உத்தரவு மற்றும் கலெக்டர் அறிவுறுத்தல் இருந்தும் 3 மாதங்களுக்கு ஒருமுறை தவணை முறையில் வழங்கப்படுகிறது. எனவே உரிய முறையில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

சாமானிய மக்கள் நலக்கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், சமூக ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கரூர் திருமாநிலையூர் அருகேயுள்ள பழைய அமராவதி பாலத்தில் பூங்கா பணிகள் நடந்து வருகிறது. அந்த பாலத்தின் தெற்கு முனையில் தீண்டாமை சுவர் எழுப்பி அடைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை இடித்து அகற்ற வேண்டும். கரூர் நகரம் கோவை சாலையில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைந்துள்ள டாஸ்மாக்கடையை அகற்ற வேண்டும் என்று கூறி முறையிட்டனர். அப்போது கலெக்டர் பதிலளித்து தெரிவிக்கையில், தீண்டாமை சுவர் என்பது கரூரில் எங்குமே கிடையாது. பாலப்பணிகள் நடப்பதால் அதற்கு ஏதுவாக வழியினை மாற்றியிருக்கின்றனர். எனினும் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

தோரணக்கல்பட்டி செல்லாண்டிபாளையம் தட்டான்காட்டை சேர்ந்த மலையப்பன் (வயது 70) மனு கொடுக்க கலெக்டர் முன்பு நின்று கொண்டிருந்தபோது, திடீரென தரையில் படுத்து உருண்டு கதறினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி விட்டு ஆசுவாசப் படுத்தி மனு கொடுக்க வைத்தனர். அவர் அளித்த மனுவில், எனது மகன், மருமகள் பணமோசடி செய்து விட்டனர். எனவே அவர்களிடமிருந்து அதனை மீட்டுதர வேண்டும் என்று கூறியிருந்தார்.

தாந்தோன்றிமலை ஏமூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பண்ணன், தனது நிலத்தை சிலர் எழுதி வாங்கி கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும், அதனை மீட்டுதரக்கோரியும் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் உடனடியாக அவரை பிடித்து விசாரித்து, இது போன்று போராட்டம் நடத்தக்கூடாது என எச்சரிக்கை கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் சார்பாக 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும், இணை இயக்குனர் மருத்துவ பணிகள் மூலம் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 20 மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்