நாங்குநேரி அருகே, மீன் வியாபாரிக்கு கத்திக்குத்து - 2 வாலிபர்கள் கைது

நாங்குநேரி அருகே மீன்வியாபாரியை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-27 22:30 GMT
நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்தை சேர்ந்தவர் சுடலைமணி(வயது65). மீன் வியாபாரி. இவரது மகன் வீடு பணகுடி அருகேயுள்ள புண்ணியவான்புரத்தில் உள்ளது. இவர், மகன் வீட்டில் தங்கியிருந்து, பெரும்பத்துக்கு வந்து மீன் வியாபாரம் செய்து விட்டு, இரவில் மகன் வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதே போன்று பெரும்பத்து ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சரவணன்(வயது22) மற்றும் 17 வயதுடைய வாலிபர் ஆகிய 2 பேரும், தற்போது தூத்துக்குடி திரேஸ்புரத்தில் வசித்து வருகின்றனர். அந்த 2 பேரும் அடிக்கடி பெரும்பத்து ஆதிதிராவிடர் காலனிக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மீன் வியாபாரத்துக்கு சென்ற சுடலைமணி, அந்த பகுதியில் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்த சரவணன் உள்பட அந்த 2 வாலிபர்களையும் கண்டித்துள்ளார். பின்னர் அந்த 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு பெரும்பத்து ஆதிதிராவிடர் காலனியில் இருந்த சுடலைமணியிடம், அந்த 2 பேரும் வந்து தகராறு செய்தனர். திடீரென்று கத்தியால் சுடலைமணியை குத்திவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் சுடலைமணியை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்