அதிக கிராமங்களை உள்ளடக்கிய அகரம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் - கலெக்டரிடம், கிராமமக்கள் மனு

அகரம் ஊராட்சியில் 17 கிராமங்கள் உள்ளடங்கியுள்ளதால் அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. எனவே அதனை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2020-01-27 22:30 GMT
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் அளித்தனர்.

கூட்டத்தில், இலவச வீடு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட 200-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

கூட்டத்தில், அணைக்கட்டு தாலுகா அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பட்டி, சுபேதார்பேட்டை, போடிப்பேட்டை உள்பட 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், அகரம் ஊராட்சியில் தற்போது 17 கிராமங்கள் உள்ளன. சுமார் 6 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அதிக கிராமங்கள் உள்ளதால் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாக கிடைப்பதில்லை. எனவே அகரம் ஊராட்சியை இரண்டாக பிரித்து, எல்லப்பட்டி, சுபேதார்பேட்டை, போடிப்பேட்டை, போடிப்பேட்டை காலனி, எடத்தெரு, அகரராஜபாளையம், அகரராஜபாளையம் புதுமனை, பழையமனை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய புதிய ஊராட்சியை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குடியாத்தம் தாலுகா தாசராபல்லி கிராமத்தை சேர்ந்த இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த கோபி அளித்த மனுவில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் பின்புறம் மருத்துவக்கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களும், மருத்துவ விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ேமலும் அங்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

குடியாத்தம் தாலுகா பேரணாம்பட்டு அருகேயுள்ள கள்ளிப்பேட்டையை சேர்ந்த 30 பேர் அளித்த மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தோம். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புதிதாக தொழில் தொடங்கவும் கடனுதவி தந்து உதவ வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இறந்த மாற்றுத்திறனாளிகள் 19 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபிஇந்திரா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சாரதா ருக்மணி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்