வீட்டு பாடம் எழுதாததால் பள்ளி செல்ல பயந்து கடத்தல் நாடகமாடிய 2 மாணவிகள் போலீசார் எச்சரித்து அனுப்பினர்

வீட்டுப்பாடம் எழுதாததால் பள்ளி செல்ல பயந்து கடத்தல் நாடகம் ஆடிய 2 மாணவிகளை போலீசார் கடுமையாக எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2020-01-27 22:14 GMT
தானே,

தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்த 11 வயது மாணவிகள் 2 பேர் சம்பவத்தன்று காலை பள்ளி செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தனர். இந்தநிலையில் அவர்களில் ஒரு மாணவி பெற்றோருக்கு செல்போனில் அழைப்பு விடுத்து பேசினாள்.

அப்போது, தங்களை முகமூடி அணிந்த பெண் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி காரில் கடத்தி சென்றதாகவும், அந்த பெண்ணின் பிடியில் இருந்து இருவரும் தப்பிஓடி வந்ததாகவும், தற்போது நாங்கள் எங்கு இருக்கிறோம் என்பது தெரியவில்லை என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.

இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து நயாநகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் மாணவிகள் இருவரையும் தேடிவந்தனர். இந்தநிலையில் அன்றைய தினம் இரவே மாணவிகள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மாணவிகளின் வீட்டுக்கு சென்று அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மாணவிகள் கூறியபடி கடத்தப்பட்டதாக எந்தவொரு ஆதாரம் சிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாணவிகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில், சம்பவத்தன்று பள்ளி ஆசிரியை வீட்டுப்பாடம் எழுத கொடுத்துள்ளார். மாணவிகள் இருவரும் வீட்டுப்பாடம் எழுதாததால், அவர்களை கண்டித்த ஆசிரியை பெற்றோரை பள்ளிக்கு அழைத்து புகார் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் பயந்து போன மாணவிகள் கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பெற்றோரை போலீஸ் நிலையம் வரவழைத்து மாணவிகள் இருவரையும் கடுமையாக எச்சரித்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்