பத்ம விருது பெற்றவர்களை அவமதிப்பதா? - கவர்னர் கிரண்பெடி வேதனை

பத்ம விருதுபெற்றவர்கள் அவமதிக்கப்பட்டதாக கவர்னர் கிரண்பெடி வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-28 00:14 GMT
புதுச்சேரி, 

புதுவை கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பாதியிலேயே வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பத்ம விருது பெற்றவர்களையும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அருணாசல பிரதேசத்தில் இருந்து வந்தவர்களையும் எவ்வாறு அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். கவர்னர் மாளிகையின் அழைப்புகள் மிகவும் மாறுபட்டவை. தன்னிச்சையானவை.

இங்கு குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பான விருதுகளை பெற்றவர்கள், அதிக விருதுகளை வென்றவர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டது. பத்ம விருது பெற்றவர்களும் இதில் அடங்குவர். அதன்படி விருது அறிவிக்கப்பட்ட இருவரையும் அழைத்தோம்.

பத்ம விருது பெற்றவர்களும் குறுகிய கால அளவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களை அங்கீகரிப்பது மரியாதைக்குரியது என்று கருதிய கவர்னர் மாளிகை அதிகாரி ஆஷாகுப்தா முதல்-அமைச்சரை சால்வை அணிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதை முதல்-அமைச்சர் ஏற்காமல் சத்தமிட்டு வாதிட்டார். முன்னறிவிப்பு மற்றும் முன் ஒப்புதல் இல்லாமல் இதை எவ்வாறு செய்யமுடியும்? என்றும் அவர் கேட்டார். அனைவர் முன்னிலையிலும் இது நடந்தது. இதனால் ஏற்பட்ட சங்கடத்தை நாங்கள் குறைக்க முயற்சி செய்தோம்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முதல்-அமைச்சர் வெளியே சென்றார். அவரை பின்தொடர்ந்து அமைச்சர்களும் சென்றுவிட்டனர். பத்ம விருது பெற்றவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகளின் நடத்தைக்கு வருந்துகிறோம்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பதிவிட்டுள்ளார்.

கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ஒரு பயிற்சி பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான எனக்கு எப்போது வணக்கம் செலுத்த வேண்டும் என்பது நன்கு தெரியும். ஆனால் முதல்-அமைச்சருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கவர்னர் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பத்ம விருது பெற்றவர்களை அவமதித்ததற்காக முதல்-அமைச்சர் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்