திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-28 22:00 GMT
திருவொற்றியூர்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த ‘சுமார்ட்கார்டு’ வழங்க விண்ணப்ப மனு வாங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

அப்போது அங்குவந்த மாற்றுத்திறனாளிகள், கடந்த 6 மாதத்துக்கு முன்பு தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை வழங்கினோம். அந்த மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அந்த மனுக்களை தங்களிடம் காட்டவேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கேட்டனர்.

அதற்கு அதிகாரிகள், நீங்கள் கொடுத்த மனுக்களை காணவில்லை என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள், தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை ஏற்று சமாதானம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் புதிய மனுக்களை தாசில்தார் சுப்பிரமணியனிடம் வழங்கினர். அவர் மனுவை பெற்றுக்கொண்டதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்