சேலத்தில், கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு - தந்தை, மகன் கைது

சேலத்தில் கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-28 21:30 GMT
சேலம்,

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 56). இவர் குகை மாரியம்மன் கோவில் அருகே மளிகைக்கடை நடத்தி வருகிறார். சோமசுந்தரம் கடந்த 25-ந் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் காலை கடையை திறப்பதற்காக சென்றார்.

பின்னர் அவர் கல்லாப்பெட்டியை திறந்து பார்த்த போது அதில் இருந்த ரூ.1½ லட்சத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இது குறித்து சோமசுந்தரம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கடையில் வேலை பார்த்து வரும் சிவகுமார்(48) மற்றும் அவருடைய மகன் கோபிநாத் (21) ஆகியோர் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், சிவகுமார் சீட்டு நடத்தி வந்துள்ளார். அதில் அவருக்கு ந‌‌ஷ்டம் ஏற்பட்டு அதிக பணத்தை இழந்துவிட்டார். இதனை சரிசெய்ய முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நேரத்தில் தான் அவர், சோமசுந்தரம் ரூ.1½ லட்சத்தை கல்லாப்பெட்டியில் வைக்கும் போது பார்த்துள்ளார். பின்னர் அவர் தனது மகனுடன் சேர்ந்து கள்ளச்சாவி போட்டு அந்த பணத்தை திருடியதாக போலீசார் தெரிவித்தனர். கைதான சிவகுமார், கோபிநாத் ஆகியோரிடம் இருந்து ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்