என்னை கேலி செய்து படத்தை வெளியிட்ட பா.ஜனதாவினர் கோழைகள் குமாரசாமி கடும் விமர்சனம்

என்னை கேலி செய்து படத்தை வெளியிட்ட பா.ஜனதாவினர் கோழைகள் என்று குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2020-01-28 21:30 GMT
பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் இன்று மோசமான அரசியல் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதி சமூக வலைதளங்களில் கேலி செய்து ‘ட்ரோல்’களை வெளியிடுவது ஆகும். ஒரு தலைவரை எதிர்த்து நின்று அரசியல் செய்ய முடியாத கோழைகள் தான் என்னை போன்ற தலைவர்களை தரம் தாழ்த்தி இவ்வாறு கேலி சித்திரங்களை வெளியிட்டு புகழை கெடுக்கிறார்கள்.

மினி மினி என்ற சொல்லை பயன்படுத்தி என்னை சமூகவலைதளத்தில் கேலி செய்து படத்தை வெளியிட்டுள்ள பா.ஜனதாவினர் கோழைகள். நான் முன்பு கூறியது போல் பாகிஸ்தானின் நாஜி மரபணுவை கொண்டுள்ள பா.ஜனதாவுக்கு கர்நாடகத்தின் அடிப்படை சமூகத்தை சேர்ந்த என்னை பார்த்தால் அவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. எதிரில் நின்று போராட முடியாதவர்கள், கேலி செய்வதன் மூலம் என்னை பேசவிடாமல் தடுக்க முயற்சி செய்கிறது. நான் பொய் பேசவில்லை.

அவதூறு ஏற்படுத் தும் வகையிலும் பேச வில்லை. ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து பேசினேன். ஆதித்யாராவ் என்ற பயங்கரவாதிக்கு ஆதரவாக பா.ஜனதா செயல்படுகிறது. உண்மை, மதங்களின் எதிரி பா.ஜனதா. கிராமப்புறங்களில் மினி மினி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அது தூய்மையான கிராமப்புற கன்னட வார்த்தை.

ஆனால் அந்த வார்த்தையை பயன்படுத்தி பா.ஜனதாவினர் என்னை கேலி செய்கிறார்கள். இதன் மூலம் கிராமப்புற மக்களை பா.ஜனதா அவமானப்படுத்துகிறது. என்ன தான் சொன்னாலும் பா.ஜனதாவினரின் மரபணு பாகிஸ்தானில் தான் உள்ளன. இவ்வாறு குமாரசாமி தெரிவித் துள்ளார்.

மேலும் செய்திகள்