தூத்துக்குடியில் பயங்கரம், ஏ.சி. மெக்கானிக் படுகொலை; மேலும் 2 பேருக்கு கத்திக்குத்து - தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது

தூத்துக்குடியில் ஏ.சி. மெக்கானிக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேர் கத்திக்குத்தில் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-01-28 23:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் மாதாநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் முத்துசெல்வம் (வயது 23). தச்சு தொழிலாளி. இவர் கடந்த 26-ந் தேதி இரவு 11 மணிக்கு அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே உள்ள டெலிபோன் பூத் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சுமை தூக்கும் தொழிலாளியான மாதாநகர் 5-வது தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் பார்த்தசாரதி (25) மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தினார். இதனை பார்த்த முத்துசெல்வம் தனது செல்போனில் மோட்டார் சைக்கிளை படம் பிடித்தார். இதனால் முத்துசெல்வத்துக்கும், பார்த்தசாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் அருகே முத்துசெல்வம் வந்தார். அப்போது அங்கு நின்ற தி.மு.க. பிரமுகரும், கோவில் தர்மகர்த்தாவுமான ரவி என்ற பொன்பாண்டி (36), பார்த்தசாரதி, அவரது அண்ணன் டீக்கடை நடத்தி வரும் இசக்கிமுத்து (26), கார் டிரைவர் கனகராஜ் (32) ஆகியோர் சேர்ந்து முத்துசெல்வத்தை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த கோவில் அருகே நின்று கொண்டிருந்த ஏ.சி. மெக்கானிக்கான மாதாநகர் 6-வது தெருவை சேர்ந்த ராஜ் மகன் செல்வம் (20), தச்சுத்தொழிலாளியான மாதாநகர் 4-வது தெருவை சேர்ந்த செல்லப்பா மகன் முத்துக் குமார் (36) ஆகியோர் சத்தம் போட்டு உள்ளனர். இதனால் 4 பேரும் சேர்ந்து, செல்வம், முத்துக்குமார் ஆகியோரையும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் செல்வம் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கோவில் தர்மகர்த்தா ரவிக்கும், செல்வத்துக்கும் இடையே கோவில் நிர்வாகம் தொடர்பாகவும் பிரச்சினை இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போது, செல்வத்தின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள், கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே ரவி, பார்த்தசாரதி, இசக்கிமுத்து, கனகராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த விவரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் செல்வம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. இந்த பயங்கர கொலையால் தூத்துக்குடியில் நேற்று பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்