நாகரஒலே தேசிய பூங்காவில் சபாரி பாதையில் உலா வந்த அரிய வகை கருஞ்சிறுத்தை

நாகரஒலே தேசிய பூங்காவில் சபாரி பாதையில் உலா வந்த அரிய வகை கருஞ்சிறுத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்

Update: 2020-01-28 22:45 GMT
மைசூரு,

மைசூரு மாவட்டத்தில் நாகரஒலே தேசிய பூங்கா அமைந்துள்ளது. மைசூரு-சாம்ராஜ்நகர் மாவட்ட எல்லையில் இந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. நாகரஒலே தேசிய பூங்காவில் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்த்து ரசிக்க வனத்துறையினர் சார்பில் சபாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜீப் மற்றும் பஸ்களில் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சபாரி அழைத்து செல்லப்படுகிறார்கள். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகரஒலே தேசிய பூங்காவுக்குள் சுற்றுலா பயணிகள் சபாரி அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சபாரி பாதையில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று ‘ஹாயாக’ உலா வந்தது. இந்த கருஞ்சிறுத்தையை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் அவர்கள் கருஞ்சிறுத்தையை தங்களின் செல்போன் மற்றும் கேமராக்களில் வீடியோ, படம் எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், ‘இதுபோன்ற கருஞ்சிறுத்தை மிகவும் அரிதாக காணப்படுகிறது. நாகரஒலே வனப்பகுதியில் எத்தனை கருஞ்சிறுத்தைகள் வசிக்கின்றன என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்