தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த வேண்டும் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2020-01-28 22:45 GMT
காங்கேயம், 

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் காங்கேயத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி தலைமை தாங்கினார். காங்கேயம் நகர காங்கிரஸ் தலைவர் சிபகத்துல்லா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியலில் பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மக்களை கலாசார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிளவுபடுத்துகின்றன. இந்திய பொருளாதாரம் தனித்துவமானது, பா.ஜனதா அரசு மிக விரைவாக பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருகிறது. இந்திய ரெயில்வேயில் 20-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் தனியாருக்கு விற்கப்படுகிறது. ரெயில் பராமரிப்பு தனியாருக்கு விடப்பட்டுள்ளது. பா.ஜனதா அரசு இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கியதுடன், பொதுமக்களையும் சிரமப்படுத்தியுள்ளனர்.

மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் ரெயில் சேவையை, தனியாருக்கு விற்பது தவறானதாகும். பல்லாயிரம் கோடி ரூபாய் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட பாரத் பெட்ரோலிய நிறுவனம் நாட்டிற்கு அவசியமானதும், லாபம் தருவது ஒன்றாகும். இதை தனியாருக்கு விற்பது ஆபத்தானது. இந்த செயல் அடிப்படை பொருளாதாரத்தை நாசப்படுத்தும். இது போன்ற தவறுகளை மோடி அரசு செய்து வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லாதது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் இந்திய குடிமகன் என்பதற்கு 31 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. பா.ஜனதா அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் சாதாரண மக்கள் பொருள் வாங்க முடியாமல் உள்ளனர். பிஸ்கெட் முதல் லாரிகள் வரை விற்க முடியாமல் உள்ளது. வாகன உற்பத்தி தொழிற்சாலையில் 4.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இந்தியாவில் மாநில அரசாங்கத்திற்கு நிறைய அதிகாரங்கள் உள்ளது. மாநில அரசாங்கதை மீறி, அந்த மாநிலத்தில் மத்திய அரசு எதையும் செய்துவிட முடியாது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மாநில அரசு நினைத்தால் மத்திய அரசின் தேவையில்லாத இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு அதை செய்யாமல் உள்ளது. நாங்கள் சமஸ்கிருதத்திற்கு எதிரானவர்கள் கிடையாது.

சமஸ்கிருதத்தை விட தமிழ் இனிமையான மொழி. நாம் புரிந்து கொள்ளக்கூடிய மொழி. நம் தாய் மொழி. தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் தமிழ் பேரரசர் ராஜராஜசோழன். எனவே தஞ்சை பெரிய கோவிலில் தமிழ்முறைப்படியே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

தனியார் தொலை தொடர்பு நிறுவனம் வளரவேண்டும் என்பதற்காக, பி.எஸ்.என்.எல். நிறுவனம் அழிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தான், மீண்டும் தி.மு.க.வுடன் கூட்டணி குறித்தும், பங்கீடு குறித்தும் பேச வேண்டும். தி.மு.க. -காங்கிரஸ் உடனான நெருக்கடி என்பது, நண்பர்கள், குடும்பத்திற்குள் வரும் நெருக்கடி போன்றது. இ யல்பான ஒன்றுதானே தவிர வேறுஎதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கேயம், பல்லடம், அவினாசி பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்