கரை வலையில் உயிருடன் சிக்கிய 10 ஆமைகளை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்

தனுஷ்கோடி கடலில் கரைவலை மீன் பிடிப்பில் உயிருடன் சிக்கிய 10 ஆமைகள் மீண்டும் கடலில் விடப்பட்டன.

Update: 2020-01-29 22:15 GMT
ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் டால்பின், கடல்பசு, ஆமை உள்ளிட்ட 3,600 வகையான அரியகடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.அதிலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை சுற்றிலும் 21 தீவுகள் உள்ளதாலும் தீவுகளை சுற்றிலும் பவளப்பாறைகள் மற்றும் ஆமை, டால்பின் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இந்த கடல் பகுதியிலேயே அதிகமாக வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் ராசுவரம் அருகே உள்ள எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரையிலான தென் கடல் பகுதிகளில் நேற்று ஏராளமான மீனவர்கள் பாரம்பரிய கரைவலை மீன் பிடிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலைகளில் சூடை, குத்தா, குமுளா, பாறை உள்ளிட்ட பல வகை மீன்கள் சிக்கியிருந்தன. பல வகை மீன்களோடு அடுத்தடுத்து மீனவர்களின் வலைகளில் 10 ஆமைகள் உயிருடன் சிக்கியது. மீன்களுடன் வலைகளில் சிக்கியிருந்த அந்த ஆமைகளை மீனவர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்து மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டனர். வலையில் சிக்கிய ஆமைகளை கடலில் விட்டதை கரையில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆச்சர்யமாக பார்த்ததுடன் செல்போனிலும் போட்டோ எடுத்தனர்.

கடந்த 3 மாதத்தில் மட்டும் தனுஷ்கோடி பகுதியில் கரை வலையில் சிக்கிய 25–க்கும் மேற்பட்ட ஆமைகளை மீனவர்கள் கடலில் விட்டுள்ளனர். ஆமை, டால்பின், கடல்பசு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உயிருடன் வலைகளில் சிக்கும் ஆமை, டால்பின் உள்ளிட்ட அரிய கடல் வாழ் உயிரினங்களை மீண்டும் கடலில் விடும் மீனவர்களுக்கு வனத்துறை பரிசுகள் வழங்கி பாராட்ட வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்