அமிர்தி பூங்கா அருகே வனப்பகுதிக்கு கல்லூரி மாணவியை கடத்திய காதலன் நண்பர்களுடன் கற்பழிக்க முயற்சி - மலைவாழ் மக்கள் மீட்டனர்

வேலூர் அருகே கல்லூரி மாணவியை வனப்பகுதிக்கு கடத்திச்சென்ற காதலன், நண்பர்களுடன் சேர்ந்து கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் கூச்சலை கேட்டு அங்கு வந்த மலைவாழ் மக்கள் காமுகர்களிடம் இருந்து அவரை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

Update: 2020-01-29 23:45 GMT
அடுக்கம்பாறை, 

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த அமிர்தி பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் சிறு வன உயிரின பூங்கா உள்ளது. ஜவ்வாதுமலை தொடரில் அமைந்துள்ள இந்த இடம் உயரமான மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த இடத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை எழிலை ரசிப்பதோடு வன உயிரினங்கள், பறவைகளை கண்டுகளித்து செல்கின்றனர். இங்கு வரும் காதல் ஜோடிகள் சில்மி‌‌ஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வனத்துறை சார்பில் பூங்கா முழுவதிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

இதனை அறிந்த காதல் ஜோடிகள் பலர் பூங்காவுக்குள் வராமல் பூங்கா செல்லும் வழியிலும், பூங்காவில் இருந்து நம்மியம்பட்டு மலை கிராமத்திற்கு செல்லும் வழியிலும் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமர்ந்து சில்மி‌‌ஷத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் வேலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவியை அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர் காதலித்து வந்தார். அந்த நபர் மாணவியை அமிர்தி சிறு வன உயிரின பூங்காவிற்கு சென்று இயற்கை அழகை ரசிக்கலாம் என கூறியுள்ளார். அதன்படி மாணவியும் காதலனை நம்பி அமிர்தி பூங்காவுக்கு வந்துள்ளார்.

பூங்காவுக்கு வருவதற்கு முன்பு காதலன், தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து சரியான நேரத்தில் அமிர்திக்கு வரவழைத்துள்ளார். பின்னர் காதலன் மாணவியிடம் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு செல்வோம் என கூறி பூங்காவில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு காதலனின் நண்பர்கள் 3 பேர் தயாராக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவியை அவர்கள் 4 பேரும் சேர்ந்து கற்பழிக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த மாணவி ‘காப்பாற்றுங்கள்’, ‘காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்டு, அழுதுள்ளார்.

அங்குள்ள வனப்பகுதியில் விறகுகளை வெட்டிக் கொண்டிருந்த மலைப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், சத்தம்கேட்டு அங்கு ஓடிவந்தார். அப்போது 4 பேர் சேர்ந்து மாணவியை கற்பழிக்க முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் தனது கையில் வைத்திருந்த விறகு வெட்டும் அரிவாளை காட்டி எச்சரிக்கை செய்துள்ளார். அவரையும் அந்த 4 பேர் தாக்க முயன்றுள்ளனர். இதனால் கோபமடைந்த முதியவர் அவர்களை வெட்ட அரிவாளுடன் துரத்தியதுடன், விசில் அடித்து உதவிக்கு மலை கிராம மக்களை அழைத்துள்ளார். விசில் சத்தம் கேட்டு ஓடிவந்த மலை கிராம மக்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது தப்பி ஓடிய கும்பலில் ஒரு வாலிபரை அவர்கள் மடக்கிப்பிடித்து கயவர்களிடம் சிக்கிய மாணவியை மீட்டனர்.

சிக்கிய வாலிபரின் தலையில் விறகு கட்டை ஒன்றை சுமந்தபடி தங்கள் மலைகிராமத்திற்கு இழுத்துச்சென்றனர். அங்கு அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மாணவியின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

நடந்த விவரங்களை கூறி, இளம்பெண்ணை பெற்றோருடன் பத்திரமாக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாணவி தரப்பில், போலீசில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. பிடிபட்ட வாலிபரையும் மாணவியின் பெற்றோர் வேண்டுகோளுக்கு இணங்க விடுவித்து எச்சரித்து மலைவாழ் மக்கள் அனுப்பி வைத்தனர்.

பல்வேறு கல்லூரிகளில் மாணவிகள் விபரீதத்தை அறியாமல் காதல் வலையில் விழுந்து பெற்றோருக்கு தெரியாமல் சென்று இதுபோன்று சிக்கிக்கொள்கின்றனர். எனவே மாணவிகள் கல்லூரிக்கு சென்று சரியான நேரத்திற்கு திரும்புவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

கணியம்பாடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமிர்தி வன உயிரியல் பூங்காவை ஒட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களும், 5-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களும் உள்ளன. அமிர்தி பூங்கா மட்டும் வேலூர் மாவட்ட எல்லையிலும், மற்ற கிராமங்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் உள்ளது. இந்த பகுதியில் ஏதாவது பிரச்சினை என்றால் அமிர்தியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜமுனாமரத்தூர் போலீசார் தான் வரவேண்டும். அப்படி இல்லையெனில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கணியம்பாடி தாலுகா போலீசார் தான் வர வேண்டும். காவல் நிலையங்களுக்கும், அமிர்திக்கும் இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால் குற்றச்செயல்கள் அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அமிர்தியில் உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்