உலக அளவில், இயற்கை முறை விவசாயத்தில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது - ஏற்றுமதி ஆலோசகர் தகவல்

உலக அளவில் இயற்கை முறை விவசாயத்தில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது என பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவு பொருட்களின் ஏற்றுமதி ஆலோசகர் பிர்சிங் நேகி கூறினார்.

Update: 2020-01-29 22:30 GMT
நாமக்கல்,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து இயற்கை முறை கால்நடை உற்பத்தி குறித்த ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாமக்கல்லில் நடத்தின. நிகழ்ச்சிக்கு நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார். கால்நடை உற்பத்தி பொருட்கள் இறைச்சி அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் குல்கர்னி வரவேற்று பேசினார்.

இதில் பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவு பொருட்களின் ஏற்றுமதி ஆலோசகர் பிர்சிங் நேகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இயற்கை முறை விவசாயத்தில் இந்தியா உலக அளவில் முன்னோடியாக திகழ்கிறது. அதற்கான நம்பகத்தன்மையை பெற்று உள்ளது. இதற்கான விழிப்புணர்வும் விவசாயிகளிடம் உள்ளது. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் பதப்படுத்தப்பட்ட வேளாண் உற்பத்தி ஏற்றுமதி முகமை சட்டத்தின் கீழ் ஏற்றுமதி தரச்சான்றிதழ் பெற வேண்டும். தேசிய அளவில் 29 நிறுவனங்கள் உள்ளன. இதில் 11 தனியார் நிறுவனங்களின் தரச்சான்றிதழ் பெற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து பேசிய ஐதராபாத் தேசிய இறைச்சி ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை விஞ்ஞானி பாஸ்வாரெட்டி, தமிழக பண்ணையாளர்கள் இயற்கை விவசாயத்தில் முன்னோடிகளாக மற்றும் எந்த காரியத்தையும் முன்னெடுத்து செல்லும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர் என்றார்.

இதில் நாமக்கல், சேலம், மதுரை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்