திருமண உதவித்திட்டத்திற்கு பரிந்துரைக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது

தமிழக அரசின் திருமண உதவித்திட்டத்திற்கு பரிந்துரைக்க பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊர் நல அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-29 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், எறைய சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீ‌‌ஷ்(வயது 27). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ‌ஷாலினிக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசின் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதிஉதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை பெற கடந்த 2 வாரங்களுக்கு முன் ‌ஷாலினியின் தாய் சாரதா ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.இந்த விண்ணப்பத்தை சரிபார்க்க பெரம்பலூர் ஒன்றிய ஊர் நல அலுவலரான ஷெரீன்ஜாய்(54), எறைய சமுத்திரம் கிராமத்துக்கு கடந்த 27-ந் தேதி சென்றார். அப்போது ‌ஷாலினி குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். இதனால் செல்போன் மூலம் ‌ஷாலினி குடும்பத்தினரை தொடர்புகொண்ட ஷெரீன்ஜாய், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பத்தின் நகல் மற்றும் அதனை பரிந்துரை செய்வதற்காக தனக்கு ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார்.

இந்த விபரத்தை ‌ஷாலினி தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் சதீ‌ஷிடம் தெரிவித்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீ‌‌ஷ் பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, ரூ.2 ஆயிரத்தை ‌ஷாலினியின் தாய் சாரதா, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இருந்த ஊர் நல அலுவலர் ஷெரீன்ஜாயிடம் நேற்று வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரசேகர் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவள்ளி, சுலோச்சனா ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவினர், ஷெரீன்ஜாயை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் வேப்பந்தட்டையில் உள்ள ஷெரீன்ஜாய் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்