பல்லடத்தில், 3 வயது குழந்தையை கடத்திய பெண் கைது

பல்லடத்தில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-29 22:15 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அரசங்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பனின் மகன் சுடலை ராஜா (வயது 24). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள் மகாலட்சுமி (3). கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் குழந்தையை விட்டு விட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் செல்வி பிரிந்து சென்று விட்டார். சுடலை ராஜா தச்சு தொழிலாளியாக வேலை செய்வதால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. இதனால் குழந்தையை காப்பகத்தில் சேர்த்து சுடலை ராஜா கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மாரியப்பன் மகாலட்சுமியை காப்பகத்திலிருந்து அழைத்துக்கொண்டு பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் 24-ந் தேதி மதியம் பேத்தியுடன் பல்லடம் திரும்பியுள்ளார். அப்போது வீட்டு வேலை செய்யவும் மற்றும் குழந்தையை பராமரிக்கவும் 25 வயது பெண் ஒருவரை உடன் அழைத்து வந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் மாரியப்பன் மது அருந்தி விட்டு தூங்கி விட்டார். இதை கவனித்த அந்த பெண், யாரும் பார்க்காத நேரத்தில் குழந்தையை கடத்தி சென்று விட்டார். சற்று நேரம் கழித்து அவர்களது வீட்டருகே வசிக்கும் பெண் ஒருவர், குழந்தை மகாலட்சுமியை அந்த பெண் கடத்தி செல்வதை பார்த்து மாரியப்பனிடம் தகவல் கூறியுள்ளார். பதறிப்போன மாரியப்பன் இந்த தகவலை தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் சுடலை ராஜா புகார் அளித்தார்.

புகாரைப் பெற்ற பல்லடம் போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், அமல் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் பாலுசாமி, சந்தானம், பாலமுருகன், பழனிசாமி உள்ளிட்டோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் பழனி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தையின் புகைப்படம் மற்றும் தேடப்படும் பெண்ணின் படம் ஆகியவற்றை வைத்து விசாரிக்கப்பட்டது. மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஈரோடு பஸ் நிலையத்தில் குழந்தையுடன் ஒரு பெண் நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு அந்த பெண்ணையும் திருப்பூர் அழைத்து வந்தனர்.

விசாரணையில் அந்த பெண் சேலம் மாவட்டம் குள்ளம்பட்டியை சேர்ந்த ஜே.மல்லிகா என்கிற அல்போன்ஸ்மேரி (24) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அந்தப்பெண் கைது செய்யப்பட்டார்.

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய தீவிரமாக பணியாற்றிய தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் நேற்று பாராட்டினார். மேலும், மீட்கப்பட்ட குழந்தை நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து சுடலை ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்