அவினாசி அருகே கோர விபத்து: அரசு பஸ்-கார் மோதல்; தாய், மகன் பலி - 2 பேர் படுகாயம்

அவினாசி அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாய்-மகன் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-01-29 23:00 GMT
அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் ஆர்.கே.ராஜசேகரன் (வயது 32). இவர் ஆங்கில நாளிதழில் நிருபராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கலைவாணி. கர்ப்பிணியான கலைவாணிக்கு வருகிற 5-ந் தேதி வளைகாப்பு நடத்த முடிவு செய்து இருந்தனர்.

அதற்காக வளைகாப்பு அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்க திருப்பூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காரில் ராஜசேகரன் சென்றார். இந்த காரில் தனது தாய் ஜமுனாராணி(54), சகோதரியும் ஊட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருபவருமான பானுப்பிரியா (37) என்பவரையும், பானுப்பிரியாவின் குழந்தை இன்ப நித்திலேன் (2) ஆகியோரையும் உடன் அழைத்து சென்றார். காரை ராஜசேகரன் ஓட்டினார்.

இவருடைய கார் அவினாசி-மேட்டுப்பாளையம் சாலையில் நரியம்பள்ளிபுதூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஊட்டியிலிருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும்-காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது.

உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிச்சென்று காருக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜமுனாராணி இறந்தார்.

இதையடுத்து மற்ற 3 பேருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் 3 பேரும் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் போகும் வழியிலேயே ராஜசேகரன் உயிரிழந்தார்.

பானுப்பிரியாவும், அவருடைய குழந்தையும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் நரியம்பள்ளிபுதூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்