திருமண அழைப்பிதழில் பெயர் போடுவதில் தகராறு: உறவினர்கள் மோதலில் பெண் சாவு - 2 பேர் கைது

எழுமலை அருகே அழைப்பிதழில் பெயர் போடுவது குறித்து உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளி விட்டதில் மூதாட்டி உயிரிழந்தார். இதில் தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-29 22:00 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உள்ள துள்ளுக்குட்டிநாயக்கனூரைச் சேர்ந்தவர்கள் ராமர் (வயது 60), சின்னச்சாமி. உறவினர்களான இவர்களின் வீடுகள் அருகருகே உள்ளன. உறவினர்களாக இருந்தாலும் இவர்கள் குடும்பத்திற் கிடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ராமர் மகன் சதீஷ்குமார் (27) என்பவருக்கு திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் பெண் வீட்டார் திருமணத்திற்கு அழைப்பிதழ் அச்சடித்துள்ளனர். இந்த அழைப்பிதழில் சின்னச்சாமியின் பெயரை போடக்கூடாது என்று ராமர் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ராமர் மற்றும் சின்னச்சாமி ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சதீஷ் குமார் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சின்னச்சாமி மனைவி அங்கம்மாள் (66) சதீஷ்குமாரை பார்த்து சாடையாக திட்டியுள்ளார். இதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கம்மாள் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அங்கம்மாள் இறந்து விட்டார். இது தொடர்பாக சின்னச்சாமி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து ராமரையும், அவரது மகன் சதீஸ்குமாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்