வேப்பூரில் துணிகரம், 5 வீடுகளில் ரூ.11 லட்சம் நகை -பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வேப்பூரில் 5 வீடுகளில் மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-01-29 21:45 GMT
வேப்பூர், 

வேப்பூர் போலீஸ் நிலையம் பின்புறமுள்ள மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் ஜமால்தீன் (வயது 54). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு சங்கராபுரத்தில் உள்ள தனது மருமகனை வெளிநாட்டிற்கு வழியனுப்பி வைப்பதற்காக புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 31 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜமால்தீன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

மேலும் மர்மநபர்கள் அருகில் உள்ள விசாலாட்சி என்பவரின் வீட்டில் 5 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், பழைய ரிஜிஸ்டர் அலுவலகம் அருகே உள்ள கண்ணன் என்பவரது வீட்டில் 5 பவுன் நகை, அண்ணா நகரில் வசித்து வரும் லதா என்பவரின் வீட்டில் 4 பவுன் நகை மற்றும் அவரது வீட்டு மாடியில் வாடகைக்கு இருக்கும் நித்யா என்பவரின் வீட்டில் இருந்து ஒரு பவுன் நகை, டி.வி., ஆகியவற்றையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து தடய அறிவியல் நிபுணர் குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த 5 வீடுகளிலும் கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரித்தனர்.

5 வீடுகளில் கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.11 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வேப்பூரில் அடுத்தடுத்து 5 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்