குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்காக புதுச்சேரி சட்டசபையை கூட்டுவது சரியானது அல்ல - அன்பழகன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்காக புதுச்சேரி சட்டசபையை கூட்டுவது சரியானது அல்ல என்று அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2020-01-29 23:32 GMT
புதுச்சேரி, 

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு இந்திய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என பேசியுள்ளார். தி.மு.க. துணையோடு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் புதுச்சேரியும், யூனியன் பிரதேசத்திற்குள் பல துறைகளில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

புதுவை விருது பெற பரிந்துரை செய்தவர்கள் தான் தமிழகமும் விருது பெற பரிந்துரை செய்துள்ளனர். எனவே முதலில் புதுச்சேரியை விருதுக்கு தேர்வு செய்தவர்களை ஸ்டாலின் அடித்துவிட்டு பிறகு தமிழக அரசுக்கு விருது வழங்கிய அதிகாரிகளை பற்றி பேசலாம்.

புதுச்சேரியில் இலவச அரிசி வழங்காதது, உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது, பஞ்சாலைகளை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் மூடியது, வேலை வாய்ப்பினை உருவாக்காதது, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாதது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வலியுறுத்தி அ.தி.மு.க. பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. ஆனாலும் முதல்-அமைச்சர் சட்டமன்றத்தை கூட்ட முன்வரவில்லை.

இந்த நிலையில் வருகிற 12-ந் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற இந்த சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுவது சரியானது அல்ல. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு புதுவைக்கு கொண்டு வர முயற்சித்தால் அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்